பெண் காவலருக்கு சர்ப்ரைஸாகக் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி

காவலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆய்வாளர்..

கடுமைக்கும் கண்டிப்புக்கும் அடையாளமாக இருப்பவர்கள் காவலர்கள். அப்படிப்பட்டவர்கள், தங்களோடு பணியாற்றும் ஓர் முதல்நிலை பெண் காவலருக்கு சர்ப்ரைஸாகக் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி நெகிழ வைத்திருக்கிறார்கள்.

Advertisements

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது பாலவிடுதி. இங்குள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் அன்னம். புகார் கொடுக்க வரும் பொதுமக்களைக் கனிவுடன் அணுகி பிரச்னைகளுக்குக் காது கொடுப்பவர்.

இந்தக் காவல் நிலையத்தில், முதல் நிலை பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார் மலர்விழி. இவர் தற்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த, அவரின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாலவிடுதி காவல்நிலையத்தில் பணிக்கு வந்த மலர்விழிக்கு ஆய்வாளர் அன்னம் ஏற்பாட்டில் சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதனை எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் மலர்விழி. காவல் நிலையத்திலேயே வைத்து, மலர்விழிக்குப் புதுப் புடவை, பழங்கள், பூ, வளையல்கள், சந்தனம், குங்குமம் வழங்கி முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.

மலர்விழிக்கு வளைகாப்பு நடத்தும் போலீஸார் சக காவலர்களின் அன்பால் நெகிழ்ந்துபோன மலர்விழி, “இதை உயிர் உள்ள வரைக்கும் மறக்க மாட்டேன்” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

Advertisements
Advertisements