டிரம்ப் எனும் கொடிய அரசியல் கொரோனா

டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்காவிற்கே அதிர்ச்சி தான், இவர் எப்படி வென்றார் என்று.

BBC பத்திரிக்கை இவ்வாறு எழுதியது அப்போது. “மிக சிலரே அவர் போட்டியிடுவார் என நினைத்தார்கள், அவர் போட்டியிட்டார். உள்கட்சி தேர்வில் வெல்ல மாட்டார் என நினைத்தார்கள் அவர்கள், ஆனால் வென்றார்.

Advertisements

அவரால் முதன்மை தேர்வில் வெல்ல முடியாது என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் வென்றார். குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பை வெல்ல மாட்டார் என்றார்கள் அவர்கள், ஆனால் அதையும் வென்றார்”. கடைசியில், அவரால் பொதுத் தேர்தலை வெல்ல முடியாது என்றார்கள் அவர்கள். இப்போது அவர் தான் அதிபர்”.

ஆமாம், இப்படி பலரின் கணிப்பையும் பொய்யாக்கி, டிரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆனார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வென்றிருந்தாலும், டிரம்ப் பொதுமக்கள் வாக்குகளில் வெல்லவில்லை என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க தேர்தல் ஒரு குழப்பமான தேர்வு முறையை கொண்டது. மக்கள் வாக்களிக்கும் தேர்தலுக்கு பிறகு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எலெக்டர்கள் வாக்களிக்கிற எலெக்டோரல் காலேஜில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றவர் டிரம்ப்.

US President Donald Trump speaks about his meeting with Russian President Vladimir Putin ahead of a meeting with Republican lawmakers and cabinet members on tax cuts at the White House in Washington, DC, on July 17, 2018. (Photo by NICHOLAS KAMM / AFP) (Photo credit should read NICHOLAS KAMM/AFP/Getty Images)

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி, சீர்திருத்தக் கட்சி, ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி, சுயேட்சை, குடியரசுக் கட்சி. இது என்ன வரிசை என்று பார்க்கிறீர்களா. டொனால்ட் டிரம்ப் 1987 ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரை சுற்றி வந்த அரசியல் பாதையில் கடந்து வந்த கட்சிகளின் வரிசை.

Advertisements

ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவமோ, அரசு சார்ந்து பணியாற்றிய அனுபவமோ இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க குடியரசு தலைவர். எந்தவித அரசியல் முன்அனுபவமும் இல்லாத டிரெம்ப்பை தேர்ந்தெடுத்ததன் பலனை இப்போது அமெரிக்கா அனுபவிக்கிறது.

தேர்தலின் போது டிரம்ப்க்கு இருந்தது ஒரே ப்ளஸ் பாயிண்ட் தான். என்.பி.சி தொலைக்காட்சியில் “தி அப்ரெண்டிஸ்” என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரை நடத்திய அறிமுகம் தான் அது. தொழிலதிபர்களை வைத்து நடத்திய அந்த நிகழ்ச்சியில், டிரம்பின் நடவடிக்கைகள் அவர் மீதான பிம்பத்தை பெரிதாக கட்டமைத்தது. ஒரு மயக்கத்தை நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மனதில் ஏற்படுத்தியது.

“ஒரு முதலாளியாக, ஒரு முதன்மை செயல் அலுவலராக, மக்களை வேலைக்கு அமர்த்துபவராக, ஒரே வார்த்தையில் வேலையை விட்டு நீக்குபவராக, எதையும் முடிவு செய்யக் கூடியவராக, எல்லாம் தெரிந்தவராக, பெரிய சர்வாதிகார ஆணாதிக்க மனிதனாக டிரம்ப் பார்க்கப்பட்டார். அது தான் அவர் பலமானது”, என டிரம்பின் வரலாற்றை எழுதிய க்வெண்டா ப்ளேர் சொல்லி உள்ளார்.

அமெரிக்க கப்பல் படை தலைவராக இருந்து, அரசியல் வாதியான ஜான் மெக்கெயினை அவமானப்படுத்தியது, பாக்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடத்துனர் கெல்லியிடம் வம்பிழுத்தது, பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டது என தேர்தல் நேரத்தில் டிரம்பிற்கு தொடர் சிக்கல்கள் தான்.

இதே போல் இன்னும் பல பின்னடைவுகள், டிரம்பிற்கு. ஆனால் அத்தனை பிரச்சினையையும் எதை வைத்து சமாளிப்பது என்ற சூட்சுமத்தை கண்டுபிடித்தார் டிரம்ப்.

அமெரிக்க மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. அது அவர்கள் மனதில் மறைந்து கிடக்கும் “தேசபக்தி”. அதை சமயம் பார்த்து கிளறி விட்டார் டிரம்ப். அடுத்து வெள்ளை மக்கள், கறுப்பு மக்கள் என்ற பிரிவினையை நைச்சியமாக தூண்டி விட்டார்.

“அதற்கு முன் இருந்த அதிபர்கள், நாட்டு மக்களை விட, வெளியார்களுக்கு கருணையோடு நடந்து கொண்டார்கள். அதனால் அமெரிக்கர்களுக்கு இழப்பு. அமெரிக்காவுக்கு இழப்பு”, என முழங்கினார்.

இந்தியர்கள் மற்றும் பல தேசத்தவர்கள் அமெரிக்காவில் முக்கியமான பணிகளில் இருப்பது ஏற்கனவே அமெரிக்களுக்கு உறுத்தல். அவர்கள் டிரம்ப் பேச்சை காது கொடுத்து கேட்டார்கள்.

முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் வாக்குறுதியான “make America great again” ( அமெரிக்காவை மீண்டும் முதன்மையாக்குவோம்) என்ற சொற்றொடரை கையிலெடுத்தார்.

“மற்ற தலைவர்கள் வெளி நாட்டினர் குடியேற்றத்தை கண்டு கொள்ளவில்லை, வர்த்தகத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக திருப்பவில்லை. நாட்டை கை விட்டுவிட்டனர்” என்ற குற்றசாட்டுகள் எடுபட்டன. நாட்டை மீண்டும் வசந்த காலத்தை நோக்கி கொண்டு வர, டிரம்ப் தான் வழி என நினைத்தனர்.

நாட்டின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க வழி இல்லை. டிராப் அதிரடியாக எல்லாவற்றையும் சரி செய்து விடுவார் என்ற மயக்கத்தை ஏற்படுத்துவதே தேர்தல் பிரச்சாரமாக அமைந்தது. தனது அடாவடி பேச்சுகள், ஏறுக்குமாறான வாதங்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்தார். மக்களின் ஒரு பகுதி மயங்கியது.

தேர்தலில் வெற்றி பெற்ற தனது அடாவடித் தனமே எப்போதும் வெல்லும் என்ற மன நிலைக்கு டிரம்பை, அதிபர் தேர்தல் வெற்றி கொண்டு சென்றது. பதவிக்கு வந்த பிறகும் அதை தொடர்ந்தார்.

இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு, தடாலடியாக பயணத் தடை விதித்தார். அதற்கு எதிர்ப்பை கண்டார். 2020 அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, உக்ரைன் நாட்டை குறுக்கு வழியில் பயன்படுத்தினார் என விசாரணை நடந்து சபை கண்டன தீர்மானம் வரை சந்தித்தார். எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை. ஏடாகூடமாக பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, எதிர்கட்சிகள் எச்சரித்தன, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது, அமெரிக்காவின் உயர் அறிவு சமூகம் எச்சரித்தது.

ஆனால் அது குறித்து கவலைக் கொள்ளாமல் தனது தேர்தல் பணிகளில் கவனமாக இருந்தார் டிரம்ப். “கொரோனா ஒரு பிரச்சினையே இல்லை, எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன”, என்ற வசனத்தை தன் பாணியில் பேசினார்.

டிரம்ப் பேசிய வசனத்திற்கு விலை, 23,000 மேற்பட்ட உயிர்கள். 5 லட்சத்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

” வலதுசாரிகள் எப்போதும் தனக்கு தோன்றியதை மாத்திரம் பேசுவார்கள், செய்வார்கள், மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள்” என்பதற்கு ஹிட்லருக்கு அடுத்த உதாரணமாக டிரம்ப் உருவெடுக்கிறார்.

இப்போதும் சீனாவை குற்றம் சாட்டுகிறார், உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டுகிறார், இந்தியாவை மருந்து கேட்டு மிரட்டுகிறார். தங்களது நாட்டுக்கு வரவேண்டிய மருந்து பொருட்களை திருடுகிறார் என கனடா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சொல்லின.

கடைசியில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய, கொரோனா வைரஸை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் அமெரிக்காவிற்கு சென்று விட்டன என தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் சொல்கிறார்.

-சிவசங்கர் எஸ்.எஸ் அவர்களின் பதிவு

Advertisements