ஏப்ரல் 22-ந்தேதி: இன்று 50வது சர்வதேச பூமி தினம்

1970-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உலக பூமி தினம் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பூமியைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே ‘பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

1969-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய கொடூர நிகழ்வின் தாக்கமாக 1970-ம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென என கடலோரமாகவே ஊர்வலம் சென்றனர்.

Advertisements

ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.


பூமியின் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்யவேண்டுமென ஐநா இந்தத் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி  விட்டது.

இதில் ஒவ்வொருவரும் இணைந்து, நம் பங்கிற்கு உரிய கடமையாற்றுவோம்…  வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!

Advertisements