மகனுக்காக 1500 கி.மீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்த தாய்

மகனுக்காக 1500 கி.மீட்டர் பயணம் செய்த தாய்

நிஜாமாபாத் மாவட்டத்தில் இருக்கிறது ‘போதான்’ என்னும் சிறுநகரம். அங்கிருந்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக நெல்லூர் சென்றிருக்கிறான் 19 வயதான நிஜாமுதின். சரியாக அந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான். தெரிந்தவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

Advertisements

வேறு வழி தெரியாமல் போகவே, அவனது தாய் ரசியா சுல்தானா தவித்திருக்கிறார். அரசுப்பள்ளியின் தலைமையாசிரியை அவர். காவல்துறையை அணுகி நெல்லூர் செல்ல பாஸ் வாங்க முயற்சித்து இருக்கிறார். வழங்கப்படவில்லை. எனவே காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த காரணம் தெரிவித்து ஒரு கடிதம் காவல்துறையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தனது ஸ்கூட்டியில், சில ரொட்டிகளை சுட்டு வைத்துக்கொண்டு, ஐந்து லிட்டர் பெட்ரோலுடன் 750 கி.மீ தொலைவில் உள்ள நெல்லூருக்குத் ஏப்ரல் 6ம் தேதி தனியாக கிளம்பி இருக்கிறார்.

கூகிள் மேப்பின் உதவியோடு வழிகளை அறிந்திருக்கிறார். அங்கங்கு காவல்துறையின் கடும் சோதனைகள், பேச்சுக்கள் எல்லாவற்றையும் தாங்கி, அவர்களுக்கு விளக்கி பயணித்தை தொடர்ந்திருக்கிறார். ஊரடங்கிய நகரங்களை, இரு பக்கமும் வனங்களாக காட்சியளித்த யாருமற்ற நீண்ட சாலைகளைக் கடந்திருக்கிறார்.

மகனை சந்தித்து இருக்கிறார். சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு திரும்பவும் போதானுக்கு புறப்பட்டு இருக்கிறார். ஏறத்தாழ 1500 கி.மீ தூரம் பயணித்த அவரை ஊரே ஆச்சரியத்தில் கொண்டாடி இருக்கிறது. தனது மகனை அழைத்து வருவதற்கு உதவிய தெலுங்கானா, ஆந்திரா காவல்துறைக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்…

Advertisements
Advertisements