முன்னணி நடிகர்களுக்கு பூச்சி. எஸ்.முருகன் வேண்டுகோள்

முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்…
கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திடீர் ஊரடங்கால் சினிமாத்துறையே முடங்கி கிடக்கிறது. இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஃப்சி சார்பில் திரை பிரபலங்களிடம் உதவி கேட்டு வாங்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல நமது சங்க உறுப்பினர் களுக்கும் உதவி கேட்டு பெற்று வழங்க வேண்டும் என்று நடிகர் சங்க தனி அதிகாரிக்கு கோரிக்கை வைத்தேன். அவரும் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

Advertisements


நடிகர்கள் தங்கள் உதவிகளை எளிதில் அளிக்க தனி வங்கி கணக்கும் அறிவித்திருந்தார் சில நடிகர்கள் அந்த வேண்டுகோளை ஏற்று உதவிகளை அறிவித்தார்கள். நானும் என்னால் முடிந்த அளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் உறுப்பினர்களுக்கு நான் நேரடியாகவும் அந்த அந்த பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் மூலமாகவும் உதவிகள் செய்துவருகிறேன்.

ஆனால் இந்த விஷயத்தில் தங்களது கரங்களும் கோர்த்தால் அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று நம்புகிறேன்.

நான் உதவி செய்வதை கேள்விப்பட்டு தமிழ்நாடு முழுக்க இருக்கும் உறுப்பினர்கள் என்னை தொடர்புகொண்டு அவர்களது சிரமங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்று மதியம் வெளியூரை சேர்ந்த நாடக நடிகர் ஒருவர் போனில் ’இதே நிலை நீடித்தால் சங்க உறுப்பினர்கள் பட்டினி சாவுக்கு தள்ளப்படுவார்கள்’ என்று கலங்கியதை கேட்டு உடைந்துவிட்டேன்.

அதனால் தான் இந்த கடிதத்தை அனைத்து நடிக, நடிகைகளுக்கும் ஒரு வேண்டுகோளாக எழுதுகிறேன். ஃபெஃப்சி அமைப்புக்கு தாங்கள் உதவிகள் செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஃபெஃப்சியில் நமது சங்கம் அங்கம் வகிக்கவில்லை.

Advertisements


அங்கம் வகித்து இருந்தால் நமது உறுப்பினர்களுக்கும் அந்த உதவிகள் கிடைத்திருக்கும். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களும் பயனடையும் வகையில் தனியாக உதவிகள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவித்துள்ளீர்கள். அது எங்கள் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

அரசுடன் நட்பு பாராட்டும் நடிகர்கள் இந்த விஷயத்தை முன்னெடுத்து உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய ஆவன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசுக்கு உதவி செய்யும் நடிகர்களும் இந்த கோரிக்கையை அரசிடம் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இந்த 2கோரிக்கைகளையும் நிறைவேற்றி நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி அவர்கள் வீடுகளில் அடுப்பு எரிவதை உறுதிபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன். அவர்களது வாழ்வாதாரம் காக்க கையேந்துகிறேன்… உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்… நன்றி


பூச்சி. எஸ்.முருகன்
முன்னாள் அறக்கட்டளை குழு உறுப்பினர்
தென்னிந்திய நடிகர் சங்கம்

Advertisements