குறிப்பிட்ட பேருந்துகளை இயக்க கேரளா அனுமதி – மத்திய அரசு எதிர்ப்பு

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள 2 மண்டலங்களில், குறிப்பிட்ட பேருந்துகளை இயக்கவும், கார்கள், ஸ்கூட்டர்களை ஓட்டவும் கேரள மாநில அரசு அனுமதித்து இருப்பது ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த மாநில அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அங்கு வெகுவாக குறைந்தது.

Advertisements

இந்த நிலையில், நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், நேற்று முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது? என்பது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருந்தது.

இந்த நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள 2 மண்டலங்களில் அந்த மாநில அரசு நேற்று முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறது. அந்த பகுதிகளில் ஓட்டல்களை திறக்கவும், தனியார் வாகனங்களை ஒற்றைப்படை எண், இரட்டைப்படை எண் என்ற அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்கவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோசுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறது.

Advertisements

நகராட்சி பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், புத்தக கடைகள், சலூன்கள் செயல்படவும், 60 கி.மீ. தூரம் வரையிலான நகரங்களுக்கு இடையே பஸ்களை இயக்கவும், கார்கள், ஸ்கூட்டர்களை ஓட்டவும் அனுமதித்து இருப்பது ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துக்கு எதிராகவும் அமைந்து இருக்கிறது.

எனவே மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊரடங்கு கட்டுப்பாடுகளை கேரள அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisements