தாய்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலையை படிப்படியாக தளர்த்த தாய்லாந்து முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த ஊரடங்கு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

கடந்த இரண்டரை வாரங்களாக தாய்லாந்தில் சமூக அளவில் எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று ஏற்படவில்லை. இதன் காரணமாக கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Advertisements

“இரவு 11 மணிக்குப் பிறகு வெளியே செல்ல விதிக்கப்பட்ட தடை இம்மாதம் 15ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும்,” என கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், தாய்லாந்துக்குள் விமானம், நிலப் போக்குவரத்து, கடல் வழியாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்துக்கு வர கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியிலிருந்து விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானங்களும் வெளிநாட்டவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கும் விமானங்களும் இதற்கு விதிவிலக்கு.

இந்தத் தடை இம்மாதம் 30ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று அவசரநிலையை தாய்லாந்து பிரகடனம் செய்தது. ஏப்ரல் 3ஆம் தேதியன்று நாடு தழுவிய இரவு நேர ஊரடங்கை தாய்லாந்து அறிவித்தது. இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை வெளியே செல்லக்கூடாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று ஊரடங்கு நேரம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மாற்றப்பட்டது.

இம்மாதம் 1ஆம் தேதியன்று ஊரடங்கு நேரம் இரவு 11 மணியிலிருந்து பின்னிரவு 3 மணி வரைக்கும் சற்று தளர்த்தப்பட்டது. தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்்த் தப்படுகின்றன.

கடந்த மே மாதம் 3ஆம் தேதியிலிருந்து தாய்லாந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது.

உணவகங்கள், முடி திருத்தகங்கள், சந்தைகள், பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பள்ளிகள் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் திறக்கப்படும். 120க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபானக்கூடங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவற்றை நேரில் காண ரசிகர்கள் செல்ல முடியாது.

இதுவரை தாய்லாந்தில் 3,129 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 58 பேர் உயிரிழந்துவிட்டனர்.

Advertisements

Related posts