கொரோனா வைரஸ் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது சீனா

கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி கொண்டிருக்கின்றன. 6 மாத காலத்தில் வைரஸ் தொற்று, பூமிப்பந்து முழுக்க கிட்டத்தட்ட ஆக்கிரமித்து விட்டது.

70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உலகமெங்கும் ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 4 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Advertisements

கொரோனா வைரஸ் தொற்று பற்றி உண்மை தகவல்களை சீனா உடனே வெளியிடாமல் மூடி மறைத்ததால் தான் உலக நாடுகள் எல்லாம் கொடிய விலை கொடுத்து கொண்டிருக்கின்றன என்று அமெரிக்கா இன்றளவும் குற்றம் சுமத்தி வருகிறது.

இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து விட்டது. அடுத்து நடக்கப்போவது என்ன என்று கணிக்க முடியாத நிலையில் நாடுகள் அனைத்தும் கதி கலங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இப்போதுதான் சீனா கொரோனா வைரஸ் பற்றி தனது நீண்ட மவுனத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை அந்த நாடு வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது. அது நீண்டதொரு விளக்கமாக இருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

Advertisements
  • கொரோனா வைரஸ் முதன்முதலாக உகானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கண்டறியப்பட்ட நாள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி ஆகும்.
  • நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மருத்துவ விளைவுகளை பகுப்பாய்வு செய்து, அந்த கண்டுபிடிப்புகள் பற்றி ஆராய்வதற்கு உள்ளூர் அரசால் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொற்றுநோயியல் நிபுணர்கள், இது வைரஸ் நிமோனியா என கூறினர்.
  • தேசிய சுகாதார கமிஷன் ஏற்பாடு செய்த உயர் மட்ட அளவிலான நிபுணர்கள், இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒன்று என்பதை முதன் முதலாக ஜனவரி 19-ந் தேதி உறுதி செய்தனர்.

இந்த நாளுக்கு முன்பாக இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சீன முன்னணி சுவாச நிபுணர் வாங் குவாங்பா தெரிவித்தார்.

ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய சுகாதார கமிஷனால் உகானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிபுணர்களில் வாங் குவாங்பா ஒருவர். உகானுக்கு நிபுணர்கள் சென்றிறங்கிய போது காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.

மேலும் வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டதாக கூறப்படக்கூடிய உகான் விலங்குகள் சந்தைக்கும், இவர்களுக்கும் நேரடி வெளிப்பாடு இல்லை என கண்டறிந்தனர்.

மேலும் வவ்வால்கள் மற்றும் எறும்புதின்னிகள் வைரசின் பரிமாற்ற ஆதாரங்களாக இருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால் அதற்கும் போதுமான ஆதாரம் இல்லை என்பது வாங் குவாங்பா கருத்து.

அதன்பிறகு, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கு பரவுமா என்பதை அறிவிக்க அறிவியலாளர்களுக்கு விடப்பட்டது. ஏனெனில் இதில் ஒரு தவறு நேர்ந்தால் அது கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையில் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு எடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையானது, கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு சீனாவும் ஆதரவு அளித்தது.

  • ஜனவரி 14-ந் தேதி, உகான் மற்றும் அந்த நகரம் அடங்கிய ஹூபெய் மாகாணமும் வைரசை சந்திக்க ஆயத்தமாக இருப்பதை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய சுகாதார கமிஷன் அறிவுறுத்தியது. ஏனென்றால், அப்போது பெரிய அளவில் நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதற்கான திறனும், வழிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
  • சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணரான ஜாங் நன்ஷான், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று ஜனவரி 20-ந் தேதி உறுதி செய்தார். அந்த நேரத்தில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 2 கேஸ்கள் இதை உறுதி செய்தன.
  • சரியான நேரத்தில் சீனா, உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், வைரஸ் பரவும் நிலவரம் குறித்து தெரியப்படுத்தப்பட்டது. வைரசின் மரபணு வரிசையும் வெளியிடப்பட்டது.
  • உகானில் சமூக பரவல் மற்றும் கொத்து கொத்தாக பாதிப்பு வந்த பின்னர் சீனாவின் பிற பிராந்தியங்களிலும் வைரஸ் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. உகானில் இருந்து அங்கு சென்றவர்களால்தான் இந்த வைரஸ் பரவியது. அதைத் தொடர்ந்து நாடளாவிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்த வைரஸ் அறியப்படாத நிமோனியா என அடையாளம் காணப்பட்ட பின்னர் ஜனவரி 3-ந் தேதி முதல் சீனாவின் சுகாதார அமைப்புகள் ஒரு நாள் கழித்து, உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவுக்கு மேலதிக விவரங்களை தெரிவிக்க தொடங்கின.

சர்வதேச சமூகம், இந்த வைரசுக்கு எதிராக ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒற்றுமை என்றால் வலிமை. இந்த போரில் உலகம் வெல்லும். இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது உலக சுகாதார நிறுவனம், பொதுவெளியில் புகழ்ந்தாலும் கூட, உரிய நேரத்தில் சீனா தகவல்கள் தராததால் உலக சுகாதார நிறுவனம் ஏமாற்றம் அடைந்து விரக்தியை சந்தித்தது என்று சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்தான் சீனா இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவின் இந்த அறிக்கையை உலக நாடுகள் ஏற்குமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Related posts