மலிவான அரசியல் வேண்டாம் : ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

‘கொரோனா பரவலை தடுக்க தமிழகம் எடுத்துவரும் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது. ஆனால் ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரத்தில் அரசியல் செய்த ஸ்டாலின், மருத்துவர் மரண விவகாரத்திலும் மலிவான அரசியல் செய்கிறார். அவர் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்தார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த்தார். திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவர்கள் பாதுகாப்பில் அரசு அலட்சியமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளாரே என செய்தியாளர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறியதாவது:

Advertisements


‘உலகின் முன்னணி நாடுகள் இன்று கரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடுகளே தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகம் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துச் செயல்படுகிறது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுபோன்ற மலிவான அரசியலை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.

இறந்த மருத்துவர் ஒரு சீனியர் நியூரோ சர்ஜன். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலம் பெற்று வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். அந்த வேதனை அனைவருக்கும் உள்ளது. ஆனால், அந்த வருத்தமான நிகழ்வை அலட்சியம் என்று பதிவு செய்வது சரியல்ல.

மருத்துவப் பணி மகத்தான பணி. அவர் இறந்த பின்னர் உரிய முறைப்படிதான் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றோம். அதனால் எந்தவித வைரஸும் பரவாது. அங்கு மறியல் செய்தவர்களுக்கு இதனை ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன். இதுபோன்ற இழி செயலில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அடக்கம் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதில் ஒரு குழு எப்போதும் உண்டு. அதில் காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சித்துறை அதிகாரிகள் உள்ளனர். ஆனாலும் அதை மீறித்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அதற்காக 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

எதிர்க்கட்சித் தலைவர் அரசைப் பாராட்ட வேண்டியதில்லை, ஆனால், மலிவான விமர்சனம் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரேபிட் கிட் விவகாரத்தில் இதைத்தான் செய்தார். இன்று மருத்துவர் விவகாரத்திலும் ஸ்டாலின் அதே மலிவான அரசியல் செய்கிறார்’. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Advertisements

Related posts