சென்னை பத்திரிகையாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சந்திப்பில் பங்கேற்ற சென்னை பத்திரிகையாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர், பிரபல நாளிதழின் நிருபர். 25 வயதான அவர், திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் மேலும் 5 பத்திரிகையாளர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தவர். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உறுதி செய்ததையடுத்து அந்த லாட்ஜ் ஜுக்கு மற்றவர்கள் செல்லமுடியாதபடி மூடப்பட்டது.

Advertisements

அந்த நிருபர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி கலந்துகொண்டவர் என்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்றே கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனா தோற்று உறுதியான மற்றொரு பத்திரிகையாளர் ஒரு பிரபலமான செய்தி தொலைக்காட்சியில் வேலைபார்த்து வருகிறார்.
23 வயதான அந்த நிருபர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக தொலைக்காட்சி அலுவலகம் சென்று வந்திருப்பதால், அங்குள்ள மற்றவர்களுக்கு பரவியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அலுவலகம் வரும் மற்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா சோதனை செய்துகொள்ள தொலைக்காட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த செய்தியாளர்களுடன் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்துகொண்ட மற்றவர்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கொரோனா சோதனை செய்துகொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisements