கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்போம் – சென்னை பத்திரிகையாளர் மன்றம்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு துணை நிற்போம்
புதிதாக எவரும் பாதிக்கப்படாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள்.

இன்று வரை (22-04-2020 ) சுமார் 30க்கும் மேற்பட்ட நம்முடைய சகோதரர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் , நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர். அனைவரும் முழுமையாக குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பெயர் , படம் , பணியாற்றும் நிறுவன அடையாளங்களை சமுக குழுக்களில் பத்திரிகையாளர்களே பதிவிடுவது பெரும் வேதனையை தருகிறது.தயவு செய்து இந்த தகாத செயலை தவிர்க்க வேண்டுகிறோம்.

Advertisements

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு முழுமையாக துணை நிற்போம்.
பாதிக்கப்பட்ட நண்பர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்தந்த அலுவலகங்கள் தாங்களாக முன்வந்து உரிய நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டுகிறோம்.

கடந்த 20-04-2020 அன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது, இதில் 4 பத்திரிகையாளர்களுக்கு நோய்த்தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த 4 சகோதரர்களைத் தவிர மற்றவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதையும், வரும் நாட்களிலும் மிக கவனமாக நோய்த்தொற்று ஏற்படாமால் பார்த்துக் கொள்ளும்படியும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து பலமுறை விடுத்த வேண்டுகோள் தான். நேரடி செய்தியாளர் சந்திப்புகளை, நோய்த்தொற்று ஆபத்து உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை தொடர்ந்து வைத்து வருகிறோம். ஆனாலும் சென்னையில் துவங்கி மாநிலம் முழுவதும் தாலுகா அளவிலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி செய்தியாளர்களை ஆட்சியாளர்கள்,அமைச்சர்கள் , அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. இந்த சந்திப்புகளில் பெரும்பாலும் தனி மனித இடைவெளி , முக கவசம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

மாண்புமிகு முதலமைச்சர்,அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடி செய்தியாளர் சந்திப்புக்களை தவிர்க்க அறிவுறுத்த வேண்டுகிறோம். முக்கியமான தகவல்களை காணொலி காட்சிகளாக வழங்கலாம். இதே நடைமுறையை அரசியல், சமுக இயக்கங்களும் கடைபிடிக்க வேண்டுகிறோம். எல்லாவற்றையும் விட செய்தி தொலைக்காட்சி ஆசிரியர்களும் , ஊடக நிர்வாகங்களும் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவு எடுத்தால் மட்டுமே பத்திரிகையாளர்களை கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் காப்பாற்ற முடியும்.

Advertisements

கொரோனா நோய்த்தொற்று என்பது ஒருவரை மட்டும் பாதிப்பதல்ல. உலகிற்கு விழிப்புணர்வை உரக்கச் சொல்லிவிட்டு நாமே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது.

பரிசோதனை செய்ய விருப்பம் தெரிவித்து 150 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் விவரங்கள் அனுப்பி உள்ளனர். உரிய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.தனித்தனியாக அழைப்பு வரும்.நோய்த்தொற்று வாய்ப்பு அதிகமுள்ள இடங்களில் அதிகமான அளவில் நாம் கூடாமல் இருக்கவே இந்த ஒருங்கிணைப்பு முயற்சி.ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.

✍️பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

Advertisements