கொரோனா எதிரொலி : மதுரை சித்திரை திருவிழா ரத்து – அதிரடி அறிவிப்பு

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் முக்கியமானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மதுரைக்கு வருவார்கள். தேரோட்டத்தின் போதும், அழகர் ஆற்றில் இறங்கும் போதும் மதுரை, மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

Advertisements


இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. இந்த விழாவின் போது மே 2-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 3-ந்தேதி திக்விஜயமும், 4-ந்தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெற இருந்தது.

மதுரையை அடுத்த கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, அங்கிருந்து கள்ளழகர் மதுரைக்கு 5-ந்தேதி புறப்பட வேண்டும். அதைத்தொடர்ந்து 6-ந்தேதி பக்தர்கள் எதிர்கொண்டு கள்ளழகரை அழைக்கும் எதிர்சேவையும், 7-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:

Advertisements

“மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சித்திரை பெருவிழாவையொட்டி வருகிற 25-ந்தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர்களுடைய திருப்திக்காகவும், தலபுராணத்தின்படியும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருக்கல்யாண வைபவ உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண், திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்ளும் மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் தங்கள் இல்லத்திலேயே வழிபாடு நடத்தி புதிய மங்கலநாண் மாற்றிக்கொள்ள காலை 9.05 முதல் 9.29 மணி வரை உகந்த நேரம் என தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மதுரையைப் போல், சித்திரை மாதத்தில் மற்ற ஊர்களில் நடைபெறும் தேர் திருவிழாக்களும் ரத்துசெய்யப்படும் என்று தெரிகிறது.

Advertisements