கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் ஜீனா. 20 வயது இளைஞரான அவர், மராட்டிய மாநிலத்தில் சங்லிமிரஜ் என்ற தொழிற்பேட்டையில் வேலை செய்துவருகிறார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அவர் வேலை செய்த தொழிற்பேட்டையும் மூடப்பட்டது.

Advertisements

பஸ், ரெயில்கள் ஓடாததால் ஊருக்கு செல்ல இயலாமல் தவித்தார். ஒரு வாரம் அங்கே தங்கியிருந்தார். அவர் வேலை செய்த தொழிற்பேட்டையை 3 மாதங்கள் வரை திறக்கமாட்டார்கள் என்று பேச்சு அடிபட்டது.

அதனால் அவரது மனதில் அச்சம் ஏற்பட்டது. 3 மாதங்கள் அங்கு தங்கினால் சாப்பாட்டுக்கு குறைந்தது 6 ஆயிரம் ரூபாய் வேண்டும். அவரிடம் ரூ.3 ஆயிரம் மட்டுமே கையில் இருந்தது.

அதனால் மகேஷ் ஜீனா ஒரு முடிவுக்கு வந்தார். தொழிற்சாலைக்கு செல்வதற்காக ஒரு பழைய சைக்கிள் வைத்து இருந்தார். அந்த சைக்கிளில் ஊருக்குச் செல்வது என்று தீர்மானித்து கடந்த 1-ந் தேதி பயணத்தை தொடங்கினார்.

மராட்டியம், ஆந்திரா, சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களையும் கடந்து 4-வதாக அவரது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு செல்ல வேண்டும்.

Advertisements

அவருக்கு வழிதெரியாது. வரைபடமும் கிடையாது. ரெயிலில் வரும்போது, பெரிய ரெயில் நிலையங்களின் பெயர்கள் அவரது மனதில் பதிந்து இருந்தன. அதை நினைவுபடுத்திக் கொண்டு, இடையிடையே ஒவ்வொருவரிடம் கேட்டுக் கொண்டே பயணத்தை தைரியமாகத் தொடர்ந்தார்.

தினமும் 16 மணி நேரம் சைக்கிள் ஓட்டினார். சுமார் 200 கி.மீட்டர் தூரத்தை குளிரிலும், வெயிலிலும் கடந்தார். இடையில் கிடைத்த ஏதேனும் ஒரு உணவை வாங்கி வயிற்றை நிரப்பிக் கொண்டு சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார். சாலை ஓரத்தில் இருந்த குளங்களில் குளித்தார்.

இவ்வாறாக ஜோலாப்பூர், ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், கஞ்சம் வழியாக 7ந்தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான, பிசித்ராபூர் எல்லையை அடைந்தார்.

சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்துவந்த மகேஷ் ஜீனாவை, கிராமத்தினர் ஊர் எல்லையில் மறித்து, அருகில் பள்ளி கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இருந்த முகாமில் தனிமைப்படுத்தினார்கள்.

மகேஷ் ஜீனா தனது துணிச்சலான 7 நாள் சைக்கிள் பயணம் குறித்து கூறும்போது, “எப்படியாவது தப்பித்து ஊர்போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் வெயிலும் குளிரும் எனக்கு தெரியவில்லை. அடைபட்டு கிடப்பதைவிட, சைக்கிள் பயணம் கடினமாக தெரியவில்லை” என்றார்.

Advertisements