மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை – இந்திய விஞ்ஞானிகள் சாதனை

கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை பரிசோதித்து அறிவதற்காக மலிவு விலை சோதனை முறை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளதா, இல்லையா என்பதை முதற்கட்டமாக பரிசோதித்து அறிவதற்கு உலக நாடுகள் பலவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்று அழைக்கப்படுகிற துரித பரிசோதனை கருவியை பயன்படுத்துகின்றன. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை விரைவாக கண்டுபிடிக்கலாம். ஆனால் சீனாவில் தயாரிக்கப்படுகிற இந்த கருவி ரூ.750-க்கு அதிகம், தென்கொரியாவில் தயாரிக்கப்படுகிற கருவி ரூ.350-க்கு அதிகம் என சொல்லப்படுகிறது.

Advertisements

இந்த நிலையில், மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அங்கமான சி.எஸ்.ஐ.ஆர். என்னும் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டிகிரேடிவ் பயாலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் மிகவும் மலிவான ஒரு சோதனை முறையை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் கொரோனா நோய் கிருமிகளை கண்டறிய விலை உயர்ந்த எந்தவொரு எந்திரமும் தேவைப்படாது. இந்த மலிவு கட்டண முறைக்கு மறைந்த திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேயின் கதைகளில் வருகிற துப்பறியும் பாத்திரமான பெலுடாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டிகிரேடிவ் பயாலஜி இன்ஸ்டிடியூட் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறியதாவது:-

இந்தப் பரிசோதனை முறையும் தற்போது வழக்கத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் முறையைப் போன்றதுதான். ஆர்.என்.ஏ.வை பிரித்தெடுத்து, டியோக்ஸரிபோனுகிளரிக் அமிலமாக மாற்றும் முறைதான். ஒரு காகிதத்தில் புதுமையான வேதியியலைப்பின்பற்றி இந்த பரிசோதனை செய்யப்படும்.

Advertisements

பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்வது போல ஒரு மணி நேரத்தில் இதில் முடிவு வந்து விடும். இந்த சோதனை முறை கண்டறிந்து இருப்பவர்கள் எங்கள் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தேபஜோதி சக்கரவர்த்தியும், சவிக் மைத்தியும் ஆவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements