தமிழிசைக்கு எதிராக ஷோபியாவின் தந்தை தாக்கல்செய்த மனு தள்ளுபடி!

தமிழிசைக்கு எதிராக ஷோபியாவின் தந்தை தாக்கல்செய்த மனு தள்ளுபடி!

விமானத்தில் கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஷோபியாவின் தந்தை தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி நீதிமன்றம்.

Advertisements

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் அந்தோணிசாமி மற்றும் ஓய்வுபெற்ற செவிலியர் மனோகரி ஆகியோரின் மகள், லூயிஸ் ஷோபியா. கனடாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவரும் ஷோபியா, கடந்த செப்டம்பர் 3-ம் தேதி சென்னையிலிருந்து விமானம்மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் பயணம்செய்தார்.

தமிழிசையைப் பார்த்ததும், “பாசிச பா.ஜ.க ஒழிக! மோடி ஒழிக!” எனக் கோஷம் எழுப்பியுள்ளார். விமானம் தரை இறங்கியதும் ஷோபியாவுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், ஷோபியா மீது, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஷோபியாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷோபியாவுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வினர்மீது ஷோபியாவின் தந்தை புகார் அளித்தார். இதத் தொடர்ந்து, ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி ஜாமீன் கோரி அளித்த மனுவின் அடிப்படையில் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஷோபியா.

தொடர்ந்து, இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பினார் ஷோபியாவின் தந்தை சாமி. தொடர்ந்து, நெல்லை சுற்றுலா மாளிகையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை மேற்கொண்டது. இந்நிலையில், தமிழிசை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளித்த புகார்மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வினர்மீது வழக்குப்பதிவுசெய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Advertisements

கடந்த 25-ம் தேதி, இம்மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, ”தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க தொண்டர்கள்மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையை நவம்பர் 20-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளுடன் புதுக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதில், ”இச்சம்பவம்குறித்து முழுமையாக விசராணை நடத்தப்பட்டதாகவும் அவற்றின் அடிப்படையில் பா.ஜ.க தலைவர் தமிழிசை உள்ளிட்ட தொண்டர்கள்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி, தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய ஷோபியானின் தந்தை அந்தோணி சாமியின் மனுவைத் தள்ளுபடிசெய்தார்.

இதுகுறித்து ஷோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமாரிடம் பேசினோம், “எங்களது மனுவின் அடிப்படையில் விசாரணைகுறித்து புதுக்கோட்டை போலீஸார் தாக்கல்செய்துள்ள விசாரணை அறிக்கையின் ஆவணங்களைப் பெற நீதிமன்றத்தில் முயற்சிசெய்து வருகிறோம். தொடர்ந்து, தள்ளுபடிசெய்யப்பட்ட மனுமீது உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யும் முடிவில் உள்ளோம்.” என்றார்.

Advertisements