கஜா’ புயல்: வேதாரண்யத்தில் 35 ஆயிரம் ஏக்கர் உப்பளம் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் டன் உப்பு சேதம் அடைந்துள்ளது.

உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. 700-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. புயல் காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் கடல் நீர் உட்புகுந்து சேறும், சகதியுமாகி சேதமடைந்துள்ளன.

Advertisements

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் கயிலை மணி வேதரத்தினம் கூறியதாவது:-

கஜா புயலின் தாக்கத்தால் ரூ.10 கோடி மதிப்பிலான 1 லட்சம் டன் உப்பு சேதம் அடைந்துள்ளது. உப்பளங்களில் இருந்த மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

எனவே சுனாமி காலத்தில் வழங்கப்பட்ட நிவாரணத்தை விட கூடுதலாக நிவாரணம் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக அரசும் உற்பத்தியாளர்களுக்கான நிலத்தீர்வையை மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும். உப்பு இலாகா அதிகாரிகள் உடனடியாக வந்து பார்த்து ஆய்வு செய்து, உப்பு தட்டுப்பாடு ஏற்படுவதற்குள் உப்பு உற்பத்தியாளர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisements

அப்போது தான் வருங்காலத்தில் உப்பு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்

Advertisements