அமித் ஷாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் முறையீடு

அமித் ஷாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் முறையீடு

ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சித் தொண்டர்களை காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷா பேசினார் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை புகார் அளித்தது.

Advertisements

இதேபோன்று, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆளும் பாஜக அரசின் அமைச்சர் ஸ்ரீசந்த கிருபாளினி மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ ரமேத் யாதவ் ஆகியோருக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷில் சர்மா சனிக்கிழமை கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் பகுதியில் அமித் ஷா அண்மையில் பிரசாரம் செய்தபோது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பாஜக தொண்டர்களை தூண்டிவிடும்படி பேசினார்.
இதேபோன்று அமைச்சரும், நிம்பகேரா தொகுதியின் பாஜக வேட்பாளருமான கிருபாளினி, தேர்தலில் மக்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக் கூறியிருக்கிறார்.

இதேபோல், அல்வர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் பாஸ் தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏ ரமேத் யாதவின் பேச்சு உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக அமைந்துள்ளது என்றார் சுஷில் சர்மா.
அதாவது, ராஜஸ்தானில் சட்டவிரோத சுரங்கங்கள் சிலவற்றுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது, “”இது ரமேத் யாதவ் சர்க்கார். லாரிகளில் சரக்கு போய் கொண்டேதான் இருக்கும்” என அவர் பேசும் விடியோவை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் ராஜேஷ் செளஹானுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் முறையிட்டுள்ளது.
தேர்தலில் பாஜக வேட்பாளராக ராஜேஷின் மனைவி ஷோபா செளஹான் போட்டியிடும் நிலையில், அவர் விதிகளை மீறி பாஜக தொண்டரைப் போல செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது

Advertisements